Bureau of Police Research and Development (BPRD): Central government warns of fraud through WhatsApp | வாட்ஸாப் வாயிலாக மோசடி; மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி : பிரபல சமூக ஊடகமான, ‘வாட்ஸாப்’ வாயிலாக அரங்கேற்றப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை மற்றும் எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான, பி.பி.ஆர்.டி., எனப்படும், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வாட்ஸாப் தகவல் பரிமாற்ற ஊடகத்தை பயன்படுத்தி ஏழு விதமான மோசடிகள் அரங்கேற்றப்படுவதை கண்டறிந்துஉள்ளோம்.

வீடியோ அழைப்பு, வேலை வாங்கி தருவதாக வரும் அழைப்புகள், முதலீட்டு திட்டங்கள், ஆள்மாறாட்டம், மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுதல், மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது, ‘மிஸ்டு கால்’ உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன.

ஆள்மாறாட்ட மோசடியில், வாட்ஸாப் பயனாளரின் மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் மோசடி பேர்வழிகள், அவர்களின் தொடர்பில் உள்ள நபர்களிடம் பணம் கேட்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

வாட்ஸாப் வீடியோ அழைப்பு வாயிலாக, ஆபாச உரையாடல் மற்றும் ஆடைகள் இன்றி உரையாடி, அந்த காட்சிகளை வைத்து, பயனாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளும் நடக்கின்றன.

அதேபோல, வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால் வருவதும் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து இந்த அழைப்பு கள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் தகவல்கள், அழைப்புகளை நிராகரிக்கவும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.