Pat Cummins On Maxwell Hospitalized: ஆஸ்திரேலியாவில் தற்போது கிரிக்கெட் சீசன் எனலாம். டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடர்ந்து, பிபிஎல் டி20 தொடரும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மேற்கு இந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணத்தில் உள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றை விளையாடுகின்றன. தற்போது முதல் டெஸ்ட் போட்டி மட்டும் நிறைவடைந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பிரிஸ்பேனில் வரும் ஜன.25ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
மருத்துவமனையில் மேக்ஸ்வெல்
இது ஒருபுறம் இருக்க, தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து சற்று காலம் ஓய்வில் இருக்கும் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 19) அன்று பார்டியில் மது அருந்திய சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேக்ஸ்வெல் அன்றைய இரவு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடங்க இருக்கும் டி20 தொடரை முன்னிட்டு பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்மின்ஸ் சொன்னது என்ன?
மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள பப்பில் நடைபெற்ற இசை கச்சேரியில் மது அருந்தி உள்ளார். அங்கிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நல பாதிப்பு குறித்த சரியான தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”நாம் அனைவரும் முதிர்ச்சியடைந்தவர்கள், இரவு கேளிக்கை பயணத்தை ஒரு பகுதியாக வைத்திருப்பவர்கள். ஒரு விஷயத்தை செய்யும்போது, நீங்கள் உங்களின் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
கிரிக்கெட் வாரியம் அறிக்கை
இந்த சம்பவத்தில், அவர் வெளிப்படையாக ஆஸ்திரேலியர்களுடன் செல்லவில்லை, அவர் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அங்கு வந்தார். கிரிக்கெட் அணியுடன் அல்ல. எனவே, இது சற்று வித்தியாசமானது. நிச்சயமாக, நீங்கள் எடுக்கும் எந்த முடிவும், நீங்கள் அதை சொந்தமாக எடுக்க வேண்டும் மற்றும் அதில் உறுதியாகவும் இருக்க வேண்டும், “என்றார். 2022ஆம் ஆண்டில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா வெளியேறிய உடனேயே, ஒரு தனியார் விருந்தில் கலந்துகொண்டபோது மேக்ஸ்வெல்லுக்கு அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அதில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டதற்கு இந்த சம்பவம் காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கவனத்திற்கு வந்தது எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிபிஎல் உள்ளிட்ட பல தொடர்கள் அடுத்தடுத்து இருப்பதால் வேலை பளூ நிர்வாகத்தை கணக்கில் கொண்டே ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை எனவும் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.