சமீபத்தில் ‘சமூக விரோதி’ என்ற படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் பரவின.
இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சீயோன் ராஜா, படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்க விண்ணப்பித்துள்ளனர்.

நடிகர் பிரஜின், நாஞ்சில் சம்பத் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சமூக விரோதி’. ‘புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம்’ என்ற வரிகளும் அந்த போஸ்டரில் இருந்தன. சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர், சீயோன் ராஜா, தயாரித்து இயக்கியிருக்கிறார். இது அவரது இரண்டாவது படம். இதற்கு முன் அவர், ‘பொதுநலன் கருதி’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

கந்துவட்டி கொடுமைகள் குறித்த படமது. இந்நிலையில் ‘சமூக விரோதி’ படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் மறுக்கப்பட்டிருப்பது குறித்து இங்கே விவரிக்கிறார் சீயோன் ராஜா. ”இது உண்மை சம்பவம் கிடையாது. முழுக்க முழுக்க கற்பனையான கதை இது. சமூக விரோதி யார்? அவங்களை உருவாக்குபவர்கள் யார்? அவர்களை அடையாளம் காட்டுபவர்களின் நோக்கம் என்ன? இப்படி பல விஷயங்களை யாரையும் குறிப்பிடாமல், சமூகப் பொறுப்போடு இந்த படத்தை இயக்கியிருக்கேன். தனிப்பட்ட மனிதர்கள் யாரையும் குறிப்பிடுவது எங்கள் நோக்கமும் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திடுறேன்.

இன்னைக்கு சமூகத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் இருக்காங்க. அந்த இளைஞர்கள் போதைக்கு எப்படி அடிமையானாங்க. அவங்களை வழிநடத்துவது யார் என்பதை கற்பனையா எழுதி, இயக்கியிருக்கேன்.
சமீபத்தில் தான் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்தாங்க. முழுப்படத்தையும் பார்த்துட்ட பிறகு, அவங்க பதிலுக்காக தியேட்டருக்கு வெளியே ஒரு மணிநேரம் காத்திருந்தோம். அதன்பிறகு கூப்பிட்டு அனுப்பினாங்க. ‘ஒரு கதாபாத்திரத்தோட தாடியை கிராபிக்ஸ் பண்ணி அழிக்க முடியுமா?’னு கேட்டாங்க. படத்துக்கு ஏற்கெனவே செலவு அதிகம் பண்ணிட்டோம்.
அதனால படம் முழுவதும் கிராபிக்ஸ் பண்ணுவது சாத்தியம் கிடையாதுனு சொன்னோம். எதனால அப்படி கிராபிக்ஸ் பண்ணணும் என்பதற்கான காரணங்களை அவங்க தெரிவிக்கல. மறுபடியும் அவங்க எங்கிட்ட, ‘நீங்க கிராபிக்ஸ் பண்ணினதுக்கு பிறகுதான், எந்தெந்த சீன்களை நீக்கவேண்டும் என்பது குறித்துச் சொல்வோம். நீங்க இதுக்கு சம்மதித்த பிறகே, என்ன சர்டிபிகேட் என்பது குறித்துச் சொல்லுவோம்’னு சொன்னாங்க. அவங்க சரியான நோக்கத்தோடு எங்ககிட்ட சொன்னது மாதிரி தெரியல! ஒரு இயக்குநராவும், தயாரிப்பாளராவும் எனக்கு பெரும் அதிருப்தியாகத்தான் இருந்தது.

அதனால வேற வழியில்லாமல் ரிவைஸிங் கமிட்டிக்கு செல்ல முடிவு எடுத்திருக்கோம். விண்ணப்பிச்சிட்டோம். இன்னிக்கு இருக்கற இளைஞர்கள் தவறான வழிக்குப் போயிடக்கூடாது. அவங்களை வழி நடத்துறவங்க, அந்த இளைஞர்களை தவறான திசைக்கு அழைச்சிட்டுப் போயிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு ஒரு படத்தை கொடுத்திருக்கோம். சென்சார் ஏன் அதிருப்தியாகுறாங்க. எதற்காக என் படத்துக்கு தணிக்கை கொடுக்க மறுக்கிறாங்க என்பதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க. அவங்களோட நோக்கம்தான் என்ன? அவங்களோட வரைமுறைகளை சரியா பயன்படுத்துறாங்களா என்பதிலும் கேள்விகுறியா இருக்கு! சமூகத்தில் நடக்கிற ஒரு விஷயத்தைதான் கலைஞர்களாகிய நாங்கள் பிரதிபலிக்கறோம். பொறுப்பான இயக்குநருக்கு இதெல்லாம் வருத்தத்துகுரியதா இருக்கு” – என்று ஆதங்கப்படுகிறார் சீயோன்.