பெங்களூரு, பிரிந்து சென்ற காதலனுடன் மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி, இளம்பெண்ணிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மந்திரவாதி உட்பட மூன்று பேர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜாலஹள்ளியில் வசிப்பவர் ராஹில் பாத்திமா, 25. இவரும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ராஹிலுக்கு, அகமது, 43, என்ற மந்திரவாதியின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம், தன் காதலன் பிரிந்தது குறித்து, ராஹில் கூறினார்.
பிரிந்த காதலனை, மீண்டும் சேர்த்து வைப்பதாக, ராஹிலிடம் அகமது கூறினார். காதலன், அவரது குடும்பத்தினர் புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டார். ‘மாந்திரீகம் செய்து, காதலனை மீண்டும் உன் பக்கம் வர வைக்கிறேன்’ என, ஆசை காட்டினார். இதை நம்பிய ராஹிலும், அகமது கேட்கும்போது எல்லாம் பணம் கொடுத்துள்ளார்.
இப்படி கடந்த மூன்று மாதங்களாக, ராஹிலிடம் இருந்து அகமது, அவரது கூட்டாளிகளான அப்துல், லியாகத்துல்லா ஆகியோர் 8.20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.
ஆனால், அகமது சொன்னபடி, பிரிந்து சென்ற காதலன், ராஹிலிடம் திரும்பி வரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை தரும்படி, மூன்று பேரிடமும் ராஹில் கேட்டு உள்ளார். பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்து, மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஜாலஹள்ளி போலீசில், அகமது உட்பட மூன்று பேர் மீதும், ராஹிலின் பெற்றோர் நேற்று முன்தினம் புகார் செய்தனர். மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்