சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகள் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழகத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவானது மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை போலீஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனமத்திய உளவுத்துறை, மாநிலபோலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர்மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும், அவரது உடமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன்செய்யப்பட்ட பின்பே உள்ளேஎடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இங்கு, ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல பாதுகாப்புகருதி ரயில்வே தண்டவாளங்களில் ரயில்வே போலீஸார் ரோந்து செல்கின்றனர். விமானநிலையங்களில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சந்தை பகுதிகள், பேருந்துநிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுபோலீஸார் அடிக்கடி சோதனைநடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபர்களின் அடையாள அட்டை, முகவரி ஆகியவற்றை பெற்ற பின்னரே அவர்களை காவல்துறையினர் விடுவிக்கின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோரமாவட்டங்களும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் கடலோர காவல் படையினர், கடலோர காவல் குழுமபோலீஸார் தொடர்ந்து ரோந்துமற்றும் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் கடற்கரையோர பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழா நடைபெறும், மெரினா கடற்கரை பகுதிகளை இரு வாரங்களுக்கு முன்பே போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதேபோல், இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றிலும் போலீஸார் தீவிர வாகனச்சோதனையும் செய்து வருகின்றனர். நகரில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.