India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வியாழன் (ஜனவரி 24) நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்திய அணியில் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இருக்கும் போது நட்சத்திர பெட்டர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஐயர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, விராட் கோலியின் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை களமிறக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு இருந்தார். பேட்டிங் பயிற்சியின் போது அவரது வலது மணிக்கட்டில் அடிபட்டுள்ளது. பிறகு பேட்டிங் செய்ய முயன்ற போது, வலியால் வெளியேறினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து இதுவரை எந்த முறையான அறிக்கையையும் வெளியிடவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் என்று ராகுல் டிராவிட் கூறி இருந்தார். எவ்வாறாயினும், அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு இன்னும் கோலிக்கு மாற்று வீரரை அறிவிக்கவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் நன்றாக ஆடும்பட்சத்தில் இந்திய அணியில் சேர வாய்ப்புள்ளது.
ரஜத் படிதார் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் மாற்று வீரராக தேர்வு செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாராவும் அணிக்கு அழைக்கப்படலாம். ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளார், ஏழு போட்டிகளில் விளையாடி 39.09 சராசரியில் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களுடன் 430 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2024
IND vs ENG முதல் டெஸ்ட்: வியாழன், 25 ஜனவரி
IND vs ENG 2வது டெஸ்ட்: வெள்ளி, 02 பிப்ரவரி
IND vs ENG 3வது டெஸ்ட்: வியாழன், 15 பிப்ரவரி
IND vs ENG 4வது டெஸ்ட்: வெள்ளி, 23 பிப்ரவரி
IND vs ENG 5வது டெஸ்ட்: வியாழன், 7 மார்ச்
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணி: ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ஸ்ரீகர் பாரத், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் சிராஜ்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட், ஜாக் க்ராலி, பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ரெஹான் அகமது, ஜானி பேர்ஸ்டோ, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், ஒல்லி போப், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்