சிக்கமகளூரு : கோவில் வருவாய் குறைவாக இருப்பதாகக் கூறி, அர்ச்சகரிடம் 10 ஆண்டுகள் சம்பளத்தை திருப்பிக் கேட்டு, கர்நாடகா அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கமகளூரு ரூரல் ஹிரேமகளூரில், கல்யாண கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில் கர்நாடகா அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது.
இந்த கோவிலின் அர்ச்சகராக, 44 ஆண்டுகளாக இருப்பவர் ஹிரேமகளூரு கண்ணன், 70.
அதிக சம்பளம்
கன்னட பண்டிதரான இவர், மாநிலக் கோவில்களில் கன்னட மொழியில் பூஜை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர். இந்நிலையில், கடந்த மாதம் 2ம் தேதி அர்ச்சகர் கண்ணனுக்கு சிக்கமகளூரு தாசில்தார் சுமந்த் அனுப்பிய நோட்டீசில், ‘மாத கோவில் வருவாயை விட, உங்கள் சம்பளம் அதிகமாக உள்ளது.
நீங்கள் வாங்கி வரும் சம்பளம் 7,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயை எடுத்து, 10 ஆண்டுகள் கொடுத்த சம்பளத்திற்காக, அரசுக்கு 4.74 லட்சம் ரூபாய் திருப்பித் தர வேண்டும்’ என, கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசுக்கு, அர்ச்சகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அவருக்கு டிசம்பர் மாதம் வர வேண்டிய, சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சம்பளத்தை திருப்பிக் கேட்டு, தாசில்தார் அனுப்பிய நோட்டீஸ், சம்பளம் நிறுத்தி வைப்பு ஆகியவை குறித்து, ஊடகங்களிடம் அர்ச்சகர் நேற்று கூறினார்.
இந்த செய்தி வெளியானதும் கர்நாடகா அரசுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது.
முன்னாள் அமைச்சர் ரவி கோவிலுக்கு சென்று, அர்ச்சகரிடம் நோட்டீஸ் குறித்து தகவல் கேட்டறிந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிடக் கூடாது என்பதால், கர்நாடகா அரசு பணிந்து உள்ளது.
நிலை என்ன?
“அர்ச்சகருக்கு நோட்டீஸ் அனுப்பியது தவறு. தாசில்தார் செய்த தவறால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது,” என, மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி ஒப்புக்கொண்டார். அத்துடன், அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்றும் கூறினார்.
நோட்டீஸ் குறித்து அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், ”44 ஆண்டுகளாக, கல்யாண கோதண்டராமர் கோவில் அர்ச்சகராக உள்ளேன். சம்பளத்தை திருப்பிக் கேட்டு நோட்டீஸ் வந்ததும், மனம் உடைந்து போனேன்.
”கோவிலுக்கு வருமானம் இல்லை என்பதற்காக, அர்ச்சகரின் சம்பளத்தை திருப்பிக் கேட்பது வியப்பளிக்கிறது. இப்படி செய்தால் அர்ச்சர்கள் நிலை என்னவாகும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்