ஆஸ்கர் விருது பட்டியல் : பார்வதி அதிருப்தி

இந்த ஆண்டுக்கான ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 10ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்கா் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' படம் 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பார்பி' படம் ஒரு சில விருதுகளுக்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போதிய வரவேற்பை பெறாத ஓப்பன்ஹெய்மருக்கு ஆஸ்கர் முக்கியத்தும் கொடுத்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த 'பார்பி' படம் பெண் இயக்குனர் இயக்கி உள்ள பெண்களுக்கான படம் என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பரவலான விமர்சனம் எழுந்துள்ளது.

'பார்பி' படத்தில் பார்பியாக நடித்த மார்கோட் ராபி விருது பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் கென் என்ற பொம்மை கேரக்டரில் நடித்த ரியோன் கோஸ்லிங் துணை நடிகை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதற்கு அவரே அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “சிறந்த படங்கள் வெளியான இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பது பெருமையளிக்கிறது. கென் என்ற கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு இத்தகைய பெருமை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை. அதே சமயம் 'பார்பி' இல்லாமல் கென் இல்லை. கிரெட்டா கெர்விக் மற்றும் மார்கோட் ராபி இல்லாமல் பார்பி திரைப்படமே இல்லை. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரலாறு படைத்த இப்படத்தின் புகழுக்கு பொறுப்பானவர்கள் இவர்கள் இருவரும். ஆனால் இருவரும் நாமினேஷனில் அந்தந்த பிரிவுகளில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. தகுதியான மற்றவர்களுடன் இவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ரியோனின் கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை பார்வதி திருவோத்து, அதோடு வெளியிட்டுள்ள தனது கருத்தில் “இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. காரணம் இங்கே ரியான் கோஸ்லிங்குகள் யாரும் இருப்பதில்லை. இங்கே திறமையோ, பங்களிப்போ முக்கியமாக கருதப்படுவதில்லை. தங்கள் மதிப்பை உணர்ந்து பேசும் பெண்கள் தொற்று நோய்களைப்போல தவிர்க்கப்படுகின்றனர். காரணம் சமத்துவமின்மைக்கு சவால் விடப்பட்டால் அவர்கள் வேறு எப்படிப் பயனடைவார்கள். ஆனால், உண்மையிலேயே தகுதியானவர்களை உயர்த்துவதற்கு தங்கள் சக்தியையும் குரலையும் பயன்படுத்தும் நண்பர்கள் இருப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.