Ayodhya Ram Temple Kumbabhishekam Will Not Impact Lok Sabha Elections | அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் லோக்சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது

பெங்களூரு : “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என, மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

நாங்களும் ஹிந்துக்கள் தான். பா.ஜ.வினரை விட, எங்களுக்கு அதிக பக்தி உள்ளது. ஆனால் அதை நாங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தி, ஓட்டுகள் பெற முயற்சிக்கவில்லை.

ஸ்ரீராம நவமிக்கு அனைத்து இடங்களிலும், பானகம், மோர் வினியோகிக்கப்படும். முதலில் இருந்தே ராமர் வழிபாடுகள் நடக்கின்றன. பானகம், மோர் குடித்த அனைவரும் பா.ஜ.வுக்கு ஓட்டுப் போடுவார்களா?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அயோத்தி ராமனை, மோடி ராமனாக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுவதில் தவறில்லை.

காந்தி கொலை நடந்தபோது, அவரது இறுதியாக கூறிய வார்த்தை ஹேராம். அந்த ராமன், எங்களின் ராமன். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவும் கூட, ராம பக்தன்தான். பா.ஜ.வினர் கோட்சே ராமன பக்தராவர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமன் சிலையை கூடாரத்தில் வைத்ததாக நான் கூறியதை பெரிதுபடுத்துகின்றனர். இப்போது பிரதமர் நரேந்திர மோடியே, ராமரை இத்தனை ஆண்டுகள் கூடாரத்தில் வைத்திருந்ததற்காக மன்னிக்கும்படி, கடவுளிடம் கேட்டுள்ளார். இப்போது பா.ஜ.வினர் என்ன சொல்வர்?

பா.ஜ.வினர் ஹிந்துத்வாவை, குத்தகைக்கு எடுத்துக்கொண்டதை போன்று நடக்கின்றனர்.

மக்களுக்கு மதவாத அரசியல் புரியும்.

சித்தராமையா முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால், லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, எதீந்திரா கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து.

இதில் தவறேதும் இல்லை. முதல்வர் பதவியை நீட்டிப்பதும், விடுவதும் மேலிடம் முடிவு செய்யும்.

கட்சியின் நலனை கருதி, லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அதிக தொகுதிகளை கைப்பற்றாவிட்டால், பதவியில் நீடிக்கும் உரிமை இல்லாமல் போய்விடும். அரசு இவ்வளவு சிறப்பாக பணியாற்றியுள்ளது. மக்கள் ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

தங்கள் கட்சியினரை, பா.ஜ.வினர் அயோத்திக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதில் தவறேதும் இல்லை.

அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும். கடவுளை தரிசிக்க, பூஜிக்க யாருடைய தடையும் இல்லை.

நானும் கூட அயோத்திக்குச் செல்வேன். என் தொகுதியின் ஹரிஜன மக்களை அயோத்திக்கு அழைத்துச் செல்வேன். அங்கு கோவிலுக்குள் விடுவார்களா, இல்லையா என பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.