கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது சிவாயம். இந்தக் கிராமத்தில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகள் பெயர் கபிஷா (வயது: 5). இந்நிலையில், ரங்கசாமியின் மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சுட வைத்துவிட்டு, சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டினுள் வந்த சிறுமி வாளியில் இருந்த சுடு தண்ணீரில் கையை வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே, அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், தங்களது பைக்கில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், அங்கே அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறுமியின் உடல் உடற்கூறாய்வு செய்வதற்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, தகவல் அறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பயந்து ஐந்து வயது சிறுமி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.