திருச்சி: திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.26) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.
“திருச்சியில் கடல் போல திரண்டு இருக்கும் திருமாவின் சிறுத்தைகளே. இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்பதற்கு இலக்கணமாக தீரர்கள் கோட்டமாம் அருமை சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடி இருக்கிறீர்கள். அவர் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.
எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன். தமிழ் இனத்துக்கு வலு சேர்க்கவே நாங்கள் இணைந்து நிற்போம். எங்களுக்கு இடையிலான உறவு தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் யாரேனும் பிரிக்க முடியுமா. அது போல தான் திராவிட முன்னேற்ற கழகமும், விடுதலை சிறுத்தைகளும்.
அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம் திமுக. பட்டியலின மக்களின் நலனை காக்கின்ற அரசு தான் நமது திராவிட மாடல் அரசு.
சமூக நிதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் வெல்லும் ஜனநாயக மாநாட்டினை கூட்டியுள்ளார். நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். ‘சர்வாதிகார பாஜக ஆட்சியை தூக்கி எறிவோம், ஜனநாயக அரசை நிறுவுவோம்’ என சபதம் ஏற்று, முக்கியமான 33 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார் திருமாவளவன். இந்த முழக்கம் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி.
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலத்தில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால் தான் குடியரசு நாளன்று இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மக்கள் ஆட்சி மாண்புகள் காக்கப்பட ஜனநாயகம் வென்றால் தான் கூட்டாட்சி மலரும்.
அதற்கு தொடக்கமா பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தமிழகத்தில் பாஜக குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. தமிழகத்தில் மட்டுமே பாஜக-வை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுக்க பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இண்டியா கூட்டணி. ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்ற இலக்க கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டணியில் இணைந்து உள்ளது. பாஜக எனும் தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டணியாக இதை சுருக்கிவிட முடியாது.
இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களை காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது. இதுதான் நமது இலக்கு.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது. ஜனநாயகம் இருக்காது. மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்கள் கார்ப்பரேஷன் ஆகிவிடும். நம் கண் முன்பே ஜம்மு காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றினார்கள். தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டுச் சிறை. இதுதான் பாஜக பாணி சர்வாதிகாரம். அந்த நிலை அனைத்து மாநிலங்களுக்கும் உருவாகும்.
கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 140 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் விவகாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் அல்லவா. இது குறித்து உலக நாடுகள் என்ன நினைக்கும். உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும். இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது.
ஒன்றியத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அகில இந்திய அளவில் இயங்கும் கட்சிகள் செயல்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் அனைவருக்கும் இருக்க வேண்டும். ‘இண்டியா கூட்டணி அமைத்தார்கள், இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றினார்கள்’ என வரலாறு கூற வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழ்த்தப்படும். ஜனநாயகம் வெல்லும். அதை காலம் சொல்லும். திருமாவளவன் வெல்வார்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்த இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.