மறைந்த பாடகர் பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

தேனி: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘அழகி’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். சபரிராஜ் என்பவரை மணமுடித்தார்.

2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார்.

விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படும் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்கு 2.5ஏக்கர் பரப்பளவில் பங்களா உள்ளது. இங்கு இளையராஜா தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கான அறைகள், தியான மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளாகத்தில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பவதாரணியின் உடலும் இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் திரைப்படத்துறையினரின் அஞ்சலிக்குப் பிறகு பவதாரிணியின் உடல் இங்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து திரையுலகினர் கூறுகையில், “இளையராஜாவுக்கு சொந்த ஊர் தேனிமாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஆகும். இருப்பினும் தமிழக எல்லையான கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அவருக்குச் சொந்தமான பங்களா உள்ளது. தீபாவளி, தாயார் மற்றும் மனைவி நினைவுநாளில் இங்கு குடும்பத்தினருடன் வருவார். பவதாரிணியின் உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.