புதுடில்லி, தமிழகத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி உள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீதான விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேலும், பதில் அளிக்கும் வரை, இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தவும் தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், அரசு டாக்டரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கடந்த மாதம் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவரிடம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இது வெறும் ஆரம்பம் தான். அமலாக்கத்துறையினர் பணியாற்றும் மற்ற மாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடந்தால் என்ன ஆகும்? இது போன்ற சந்தர்ப்பங்களில் விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
விசாரணை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், உண்மையிலேயே குற்றம் செய்தவர் தப்பித்துவிடக் கூடாது.
அமலாக்கத்துறை அதிகாரி மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதுவரை, இந்த வழக்கில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொள்ள கூடாது. வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க கோரும் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement