ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி , ‘மொய்தீன் பாய்’ எனும் கெளரவ கேரக்டரில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் நடிகர் தம்பி ராமையா முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தம்பி ராமையா, “ராமர் கோயில் பிரதிஷ்டை நடக்கும்போது ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ராம் ரகீம்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

அந்தத் தாயின் குணம்தான் இந்த ‘லால் சலாம்’ படத்தின் கதை. சுதா கொங்கராவுக்குப் பிறகு பெண் இயக்குநர்கள் ஃபீல் குட் படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை உடைத்து ஆண்களுக்கு நிகராக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. சிவாஜி ராவாக வந்தவர் ரஜினிகாந்தாக மாறி கருப்பு என்பதை திராவிட இனத்தின் நிறம் என்பதை நிரூபித்தார். இளைய தளபதி விஜயக்கும் ரஜினி ஊக்கமளித்திருக்கிறார். முதல்வர் நாற்காலி அவரை 1996 ஆம் ஆண்டு வந்தமர அழைத்தது. ஆனால் அதை தனது ஞானத்தால் மறுத்தார். சினிமா உயிர்போடு இருப்பதற்கு ரஜினிகாந்த் தேவை” என்று பேசினார்.