இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் 23 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக இருக்கும் சுப்மான் கில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பில் இருக்க, அவர் விக்கெட்டை பறிகொடுத்த விதம் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மான் கில் அவுட்டான விதத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் விமர்சனம்
66 பந்துகள் எதிர்கொண்ட சுப்மான் கில் 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து மிட்விக்கெட்டில் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார். இது குறித்து பேசியிருக்கும் கவாஸ்கர், கல்லின் ஷாட் சலெக்ஷன் சிறப்பாக இருக்கவில்லை, என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் அனுமானிக்க முடியவில்லை என கூறியுள்ளார். ” தனக்கான இடத்தில் கில் களமிறங்கி செட்டிலாகிக் கொண்டிருந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் எதற்கு அப்படியான ஷாட் என தெரியவில்லை. அடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு நல்ல கேப்பை பார்த்து அடித்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடி மோசமான ஷாட்டில் அவுட் ஆவதை நான் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஜடேஜா சிறப்பான பேட்டிங்
இருப்பினும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையிலேயே இருக்கிறது. கே.எல்.ராகுல் 86 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின் வரிசையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நங்கூரம்போல் நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு பக்கபலமாக அக்சர் படேலும் நல்ல கம்பெனி கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களுக்கு ஜோ ரூட் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்து நடையை கட்டினார் ஜடேஜா.
இந்திய அணி ஆல்அவுட்
மறுமுனையில் 44 ரன்களுக்கு அக்சர் படேல் விக்கெட்டை பறி கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால், இப்போது அந்த அணியை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருக்கிறது.