IVF தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு முறையில் காண்டாமிருகத்தை கருத்தரிக்கச் செய்யும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
வெள்ளை காண்டாமிருகத்தின் துணையினங்களில் ஒன்றான வடக்கு வெள்ளை காண்டமிருகம் என்பது ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்த காண்டாமிருக வகையாகும். ஆயிரக்கணக்கில் இந்த மிருகங்களின் எண்ணிக்கை இருந்தது.

அவற்றின் விலைமதிப்புமிக்க தந்தத்துக்காக சட்டவிரோதமாக மனிதர்கள் இவ்விலங்குகளை வேட்டையாடினார்கள். இதன் காரணமாக தற்போது இந்தவகை காண்டமிருக இனம் அழிவின் விளிம்புக்கு வந்துள்ளது. கடைசியாக ஓர் ஆண், இரண்டு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில் ஆண் காண்டாமிருகமான சூடான், உடல்நலக்குறைவால் 2018-ம் ஆண்டு இறந்துவிட, இரண்டு பெண் காண்டாமிருகங்களான நஜின் மற்றும் ஃபது மட்டுமே எஞ்சியுள்ளன.
இவ்விரண்டும் கென்யாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண் இனம் இல்லாததால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இவ்வினமே அழியும் நிலையில் உள்ளது. உலக அரங்கில் அழியும் நிலையில் உள்ள விலங்கினமாகவும் இந்த வடக்கு வெள்ளை காண்டமிருகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் மறைவுக்குப் பிறகு, IVF தொழில்நுட்ப கருத்தரித்தல் முறையைப் பயன்படுத்தி இவ்விலங்கினங்களை அழிவிலிருந்து காக்க முயற்சிகள் எடுத்துவருகிறோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகு இந்த விலங்கு இனத்தைக் காப்பதற்கான முயற்சிகளை சர்வதேச அமைப்பான ‘பயோரெஸ்க்யூ’ (Biorescue) கையில் எடுத்தது. அந்த அமைப்பின் விஞ்ஞானிகள் IVF கருத்தரித்தல் முறையைச் செயல்படுத்த சோதனைக்காக வடக்கு வெள்ளை காண்டமிருக மரபணுக்களை ஒத்த தெற்கு வெள்ளை காண்டமிருகங்களைத் தேர்வு செய்தனர்.
தெற்கு வெள்ளை காண்டமிருகங்களிடம் இருந்து உயிரணுக்களையும் கருமுட்டையையும் எடுத்து, ஆய்வகத்தில் கருவாக மாற்றம் செய்தனர். அக்கருவை வெற்றிகரமாக வாடகைத் தாயான தெற்கு வெள்ளை பெண் காண்டமிருகம் ஒன்றின் வயிற்றினுள் செலுத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாடகைத் தாய் தொற்றுநோய்க்கு ஆளாகி இறந்தது. இறந்த காண்டாமிருகத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது 100% ஆரோக்கியமான, எழுபது நாள் கருவை வயிற்றில் வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து பேசிய திட்டத்தின் தலைவர் பேராசிரியர் தாமஸ் ஹில்டெப்ராண்ட்,”காண்டாமிருகத்துக்கு IVF செய்வதென்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அவற்றின் கருப்பை உடலினுள் 2 மீட்டர் தொலைவில் இருப்பதால் கருமுட்டையைச் சேகரிப்பதும், கருவை உட்செலுத்துவதும் மிகவும் கடினமான விஷயம். இருந்தபோதிலும் காண்டாமிருகத்துக்கு IVF தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி கருத்தரிக்கும் சோதனையில் வெற்றிபெற்றுள்ளது இதுவே முதல்முறை.
இந்த வெற்றிக்குப் முன்பாக 13 முறை முயன்று சோதனையில் தோல்வியடைந்துள்ளோம். இந்த வெற்றியின் மூலம், அழிவின் விளிம்பில் உள்ள வடக்கு வெள்ளை காண்டமிருக இனத்தை மீண்டும் இனப்பெருக்கம் செய்ய இயலும். ஏற்கெனவே இறந்த வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகங்களிடமிருந்து முழு வளர்ச்சி அடையாத உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. அதோடு உயிரோடு உள்ள பெண் காண்டாமிருகமான ஃபதுவின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, இரண்டையும் இணைத்துக் கருக்களாக உருமாற்றம் செய்து, ஜெர்மனி மற்றும் இத்தாலியில் உள்ள ஆய்வகத்தில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருக்களின் எண்ணிக்கை வெறும் 30 மட்டுமே உள்ளன.

இவற்றை பெண் காண்டாமிருகத்தின் கருப்பையில் செலுத்தி வடக்கு வெள்ளை காண்டமிருக கருவை உருவாக்க உள்ளோம். தற்போது உள்ள இரண்டு வடக்கு வெள்ளை பெண் காண்டாமிருகங்களுக்கும் வயதாகிவிட்டது. அவற்றால் கருவைச் சுமக்க முடியாது. எனவே, வாடகைத்தாயாக தெற்கு வெள்ளை பெண் காண்டாமிருகத்தைத்தான் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த மிருக இனமே அழிவின் விளிம்புக்குச் சென்றதற்கு காரணமானவர்கள் மனிதர்கள் தான். எனவே, அதை மீட்டெடுப்பதும் மனிதர்களின் கடமைதான். அவ்விலங்கினங்களை மீட்கும் முயற்சியில் வெற்றி கண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.