கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (100 நாள் வேலை) ஊழியர்கள் 21 லட்சம் பேருக்கான நிலுவைச் சம்பளத் தொகை பிப்ரவரி 21-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தொடங்கினார். இந்த நிலையில், சனிக்கிழமை அதிரடியாக இவ்வாறு அறிவித்துள்ளார்.
மம்தா கூறுகையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீ்ழுள்ள 21 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசு தராமல் வைத்துள்ள ஊதியத்தை மாநில அரசு வழங்கும். இந்த நிலுவைத் தொகை பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பயன்பாட்டுச் சான்றிதழ் தாமதமாக வழங்கப்பட்டது என்ற தலைமைக் கணக்கு தணிக்கையகத்தின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, அதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில் அவர், பிழையான அறிக்கை, தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கி விடும் என்றும், மாநில அரசுக்கு எதிராக சிலர் தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ள அதை பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கடித்தில், “சிஏஜியின் 2020-21 ஆண்டுக்கான மாநில நிதி தணிக்கை அறிக்கையில், 2000-03 முதல் 2020-21 ஆண்டு வரை ரூ.2,29,099 கோடிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு நிதி பயன்பாட்டு சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய காலத்தில் அனுப்பி வைத்து விடும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.