புவனேஸ்வர்: ஒடிசாவில் ரூ.400 கோடியில் கட்டப்பட்ட ஐஐஎம்-சம்பல்பூர் மற்றும் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றுஒடிசா மாநிலத்துக்கு சென்றார். சம்பல்பூரில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஐஐஎம் வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் ரகுபர்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ், ரூ.2,450 கோடி செலவில் கட்டப்பட்ட தம்ரா-ஆங்குல், ஜெகதீஸ்பூர்-ஹால்டியா, பெகாரா-தம்ரா இடையேயான பைப்லைன் திட்டம் உட்பட ரூ.68 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சில புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒடிசாவில் கல்வி, ரயில்வே, நெடுஞ்சாலைகள், மின்சாரம், பெட்ரோலியம் போன்ற துறைகளில் சுமார் ரூ.68,400 கோடிமதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்அனைத்து தரப்பு மக்களும் பயனடைவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒடிசா மாநிலத்தை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையமாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் ரயில்வே பட்ஜெட் 12 மடங்கு அதிகரித்துள்ளது. பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்ஒடிசா கிராமங்களில் 50,000 கி.மீதூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடைந்தால்தான் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஒடிசாவின் கேந்திரபாரா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும்சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் ஒடிசாவில் தற்போது பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு 7.30 மணிக்கு அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் ரூ.11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.
விரைவாக நீதி வழங்க ஒத்துழைப்பு தேவை: காமன்வெல் நாடுகளின் அட்டர்னி மற்றும் சொலிசிடர் ஜெனரல் மாநாட்டை காமன்வெல்த் சட்ட கல்வி சங்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடத்தியது. இதை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:
விமானம், கடல்சார் போக்குவரத்தில் உலக நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. இதேபோன்ற ஒத்துழைப்பு குற்ற வழக்குகளின் விசாரணை மற்றும் நீதி வழங்குவதிலும் இருக்க வேண்டும். பல நாடுகளில் உள்ள குற்றவாளிகள் தங்களின் குற்ற செயல்களுக்கு நிதி திரட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். கிரிப்டோ கரன்சி மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் போன்றவை புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் நீதி கிடைக்க, சட்ட விதிமுறைகளை சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டால், தாமதம் இன்றிு விரைவில் நீதி வழங்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.