`சசிகலாவும், டி.டி.வி-யும் ஒன்று சேர்ந்து எனக்கு பவர் கொடுத்துவிட்டனர்!' – ஓபிஎஸ்

“தனிச்சின்னம் என்கிற கேள்விக்கே இடம் இல்லை, நாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்…” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

`அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ சார்பில் இன்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர் செல்வம், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடையப்போவது உறுதி. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே நாங்கள் அங்கம் வகித்துள்ளோம். தனித்து நிற்கப் போவதில்லை, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிடுகிறோம்.

பத்தாண்டுக்காலம் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வருவார், மோடி மீண்டும் பிரதமராக அனைத்து நிலைகளிலும் ஆதரவளித்து வருகிறோம். உலகத்தில் உள்ள 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுகின்றன. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது, ஆகவே மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என பாடுபட்டு வருகிறோம்.

ஓ.பன்னீர் செல்வம்

இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது. அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என இரட்டை இலையை உரிமை கோர முடியும், அந்த உரிமையின் அடிப்படையில் இரட்டை இலையைக் கேட்போம்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாள்களில் முடிவுகள் வெளியிடப்படும், தனிச்சின்னம் என்கிற கேள்விக்கே இடம் இல்லை, நாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.

எடப்பாடி பழனிசாமி பக்கம் இரண்டு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது பொய், எடப்பாடி பழனிசாமி தரப்பு, வாக்காளர் பட்டியலை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன், விஜய் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வாங்குகின்ற வாக்குகளைப் பொறுத்தே தெரியவரும்.

பிரிந்திருந்த சசிகலா, டி.டி.வி உள்ளிட்ட சக்திகள் ஒன்று சேர்ந்து எனக்கு பவர் கொடுத்து விட்டார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.