இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விசுவிற்கு அடுத்து குடும்பப் பாங்கான படங்களை இயக்கிய பெருமை டி.பி.கஜேந்திரனுக்கும் உண்டு.
விசு நடித்த ‘வீடு மனைவி மக்கள்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் டி.பி.கஜேந்திரன். விசு இயக்கி நடித்த ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் நடிகரானார். நகைச்சுவை, குணச்சித்திரம் என ஸ்கோர் செய்து வந்தார். சென்ற ஆண்டு இதே நாளில் சிறுநீரக பிரச்னை காரணமாக உயிரிழந்தார். அவரை பற்றிய சில நினைவலைகள் இங்கே..

* இவரது பூர்வீகம் தூத்துக்குடி என்றாலு கூட, வடபழனி வாசி இவர். கல்லூரிப் படிப்பை மாநிலக் கல்லூரியில் முடித்தவர். அதன்பிறகு சினிமா ஆசை வந்திருக்கிறது. அவரது அப்பா நடத்தி வந்த தங்கும் அறைகளில் சில உதவி இயக்குநர்கள் தங்கியிருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலிலே இவருக்கு சினிமா கனவு ஏற்பட்டிருக்கிறது. அந்த உதவி இயக்குநர்களே படப்பிடிப்புக்குக் கூட்டிச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் பாலசந்தரிடம் உதவி இயக்குநராகவும் ஆக்கினார்கள். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விசு, வெளியே தனியாக படம் இயக்கும் போது, கஜேந்திரனையும் கூப்பிடுக் கொண்டார். அந்த நட்பில்தான் கஜேந்திரன் இயக்குநர் ஆனதும் விசுவை இயக்கினார். அதைப் போல விசுவின் படத்திலேயே கஜேந்திரன் நடிகராகவும் ஆனார்.
* தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்லூரி தோழர் இவர். இவர்கள் இருவரும் காலேஜ் மேட்ஸ். இருவரும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர்கள். அப்போது தொடங்கிய அந்த ஆத்மார்த்தமான நட்பு இறுதிவரை தொடர்ந்தது. ஆனாலுமே இருவருமே அதை பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொண்டது இல்லை என டிபிஜியே சொல்லியிருக்கிறார்.

* சென்னை வடபழனியில் டி.பி.ஜி நெஸ்ட் என்ற பெயரில் தங்கும் அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். படப்பிடிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ரெகுலராக ஹோட்டலுக்கு விசிட் அடித்துவிட்டுவார். ஓய்வு நேரங்களில் தன் பள்ளித் தோழர்கள் முதல், சினிமா நண்பர்கள் வரை பலரையும் அங்கே வரவழைத்து, அன்புடன் அளவளாவுவார்.
* விசுவிற்காக அவர் உருவாக்கிய கதைதான் `வீடு மனைவி மக்கள்’. அதை கன்னடத்திலும் இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் கன்னடத்தில் வாணி ஶ்ரீ மீண்டும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார் என்பார்கள். இளைய திலகம் பிரபுவிற்கு ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’ ஆகிய படங்கள் மூலம் நடுத்தர குடும்பங்களிடம் பிரபுவையும் கொண்டு சேர்ந்தார்
* பிரசன்னாவை வைத்து ‘சீனா தானா 001’ என்ற படத்தையும், விவேக்கை வைத்து ‘மகனே என் மருமகனே’வையை இயக்கியவர் அதன் பின் முழு நேர நடிகரானார். யோகிபாபுவை பல நகைச்சுவை நடிகர்களுடனும் அவர் நடித்துவிட்டார்.
* கஜேந்திரனின் ஹோட்டலில் இன்னொரு அதிசயம். அவரது லாட்ஜின் முதல் தளத்துக்கு விசுவின் பெயரயும், இரண்டாவது தளத்துக்கு பாலசந்தரின் பெயரையும், முன்றாவது தளத்துக்கு பாரதிராஜாவின் பெயரையும் சூட்டியிருந்தார். இதில் பாரதிராஜா இயக்குநர் ஆவதற்கு முன்னால், அங்கே தங்கியிருந்தார் என்பதால் அவரது பெயரையும் வைத்துவிட்டார். டிபிஜியின் காலத்தில் லாட்ஜ், ஹோட்டல் என ஆரம்பிக்க விரும்பிய பல நடிகர்களும் இவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.