ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., திடீர் போர்க்கொடி துாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில மோசடி வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன், முதல்வராக பதவியேற்று உள்ளார்.
சட்டசபையில் இன்று பெரும்பான்மையை அவர் நிரூபிக்க உள்ளார். மொத்தம், 81 உறுப்பினர்களை உடைய சட்டசபையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளையும் சேர்த்து, 47 பேர் ஆதரவு உள்ளதாக சம்பாய் சோரன் கூறியுள்ளார்.
பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு, 32 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஷ்ணுபுர் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான சம்ரா லிண்டா மாயமாகியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே, இந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.,வான லோபின் ஹெம்ப்ரோம், திடீரென போர்க்கொடி துாக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:
மாநிலத்தில், பழங்குடியினருக்கான உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நோக்கத்துடன் தான், இந்தக் கட்சி துவக்கப்பட்டது.
ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தும், பழங்குடியினரின் நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இது தொடர்பான இரண்டு மாநில சட்டங்கள் மற்றும் ஒரு மத்திய சட்டத்தை அமல்படுத்தும்படி, ஹேமந்த் சோரனிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால், தற்போது சிறையில் உள்ளார்.
நான் ஏமாற்றிவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட போராட உள்ளேன். இதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹைதரபாதில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று இரவு அங்கிருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்