Plan to withdraw Indian Army from Maldives by May | மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை மே மாதத்துக்குள் அனுப்பி வைக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாலே: ”மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முதற்கட்டமாக மார்ச் 10ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மீதமுள்ளவர்கள் மே 30க்குள் அனுப்பப்படுவர்,” என மாலத் தீவு அதிபர் முஹமது முய்சு தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான மாலத்தீவில், அதிபர் முஹமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது, முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 15ல் புதிய அதிபராக பொறுபேற்ற முய்சு, ‘மாலத்தீவு இறையாண்மை பாதிக்கப்படுவதால், இங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும்’ என, மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

அவ்வப்போது, நடக்கும் கூட்டங்களில் இதே கருத்தை முஹமது முய்சு வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் அவர் நேற்று பேசியதாவது:

மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது. மாலத்தீவில் நிலைகொண்டுள்ள தன் படைகளை திரும்ப பெறும்படி, அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய பேச்சின்படி, இங்குள்ள இந்திய ராணுவத்தினர் அனைவரும் வரும் மே மாதத்துக்குள் வெளியேற்றப்படுவர். மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்.

அவற்றில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படுவர். மற்ற இரண்டு விமான தளங்களில் உள்ள வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறிவிடுவர். இதற்கான ஒப்பந்தம் இந்தியா – -மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாலத்தீவில் தற்போதுள்ள 88 இந்திய ராணுவ வீரர்கள், பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வரும் அவர்கள், ராணுவ ரீதியிலான எந்த பணியிலும் ஈடுபடவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.