கொழும்பு, இலங்கையில் போலி ஆவணங்கள் வாயிலாக மருந்துகளை கொள்முதல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சிக் காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் கெஹலியா ராம்புக்வெல்லா, 70. அதன் பின், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார்.
இவர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, நம் நாட்டின் குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட மருந்து நிறுவனத்தின் வாயிலாக இம்யூனோகுளோப்ளின் என்ற மருந்தை கொள்முதல் செய்ததாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்., மாதங்களுக்கு இடையே அங்குள்ள மருத்துவமனைகளுக்கும் இம்மருந்துகள் வினியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், இம்மருந்து, இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை கமிஷனின் கீழ், போலி ஆவணங்கள் வாயிலாக கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இதைஅடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் சுகாதாரத்துறையின் உயரதிகாரிகள் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இதற்கு மூளையாக செயல்பட்டதாக அமைச்சர் ராம்புக்வெல்லாவும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவியில் இருந்தும், தான் விலகுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ராம்புக்வெல்லா நேற்று ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். இதை அதிபர் ரணில் விக்ரம்சிங்கே ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement