புவனேஸ்வர்: ஒடிசாவில் பா.ஜ., உடன் முதல்வர் நவீன் பட்நாயக் கூட்டணி வைத்துள்ளார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக இன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒரு சட்டை எடுத்தால் கூட, பணக்காரர்கள் செலுத்தும் அதே வரியை இந்தியாவில் உள்ள ஏழை மக்களும் செலுத்துகிறார்கள். ஆனால், நாட்டில் ஏழைகளின் வருமானம் 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் போது, பணக்காரர்களின் வருமானம் லட்சக்கணக்கான கோடி ரூபாய். பிரதமர் மோடி 6 தொழிலதிபர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்குகிறார்.
ஒடிசாவில் பா.ஜ., உடன் நவீன் பட்நாயக் கூட்டணி வைத்துள்ளார். நீங்கள் பயன்படுத்தும் போன் சீனாவில் தயாரிக்கப்பட்டது. இதனால், சீன இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். பழங்குடியினரின் நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. பழங்குடியினர் பயப்பட வேண்டாம். உங்களின் காடு, நிலம் கோடீஸ்வரர்களுக்கு போக நாங்கள் விடமாட்டோம். தெலுங்கானாவில் பா.ஜ., மற்றும் பி.ஆர்.எஸ்., யை காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார்.
அஞ்சலி
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் சிலைக்கு காங்.,எம்.பி ராகுல் மரியாதை செலுத்தினார்.
கோயிலில் ராகுல் செய்த காரியம்!
ஒடிசாவில் பாரத் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல், ரூர்கேலா சுந்தர்கர் நகரில் உள்ள வேத்வியாஸ் கோயிலுக்கு சென்றார். கோயிலில் தரிசனம் செய்த ராகுல் பூசாரியிடம் நெற்றியில் சிறியதாக திலகமிடும்படி கூறி பெற்று கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது குறித்து பா.ஜ.,வினர், ‛‛தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் இந்து கோயில்களுக்கு சென்று திலகம், திருநீர் பூசிக்கொள்கிறார். இவர் தேர்தல் கால இந்து” என சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement