பெங்களூரு : விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரில் கரும்பு விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கரும்பு விவசாயிகள், பெங்களூரு சுதந்திர பூங்காவில், நேற்று ஒன்று திரண்டனர்.
தெலுங்கானா அரசு போன்று, கர்நாடகாவிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யயும்படி வலியுறுத்தினர்.
மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் பேசியதாவது:
மழையின்றி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், விளைச்சல் நாசமானது. எனவே ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். சமீபத்தில் ஆட்சிக்கு வந்த தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது போன்று, கர்நாடகாவில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு, அந்த நிலம் சொந்தமானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும்.
அனைத்து கோரிக்கைகளையும், பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்வளவு கஷ்டத்தில் இருந்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படவில்லை.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். விவசாய பிள்ளைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கரும்பு அறுவைக்கு, சர்க்கரை ஆலைகள் குறைந்த விலை நிர்ணயித்துள்ளனர். இதை அதிகப்படுத்த வேண்டும்.
ஒரு டன் கரும்புக்கு கூடுதலாக 150 ரூபாய் தரும்படி, சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். எதிர்பாராத விதமாக இறக்கும் விவசாய குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி தர வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு அமல்படுத்த வேண்டும்.
விளைச்சல் நஷ்டத்துக்கு, விஞ்ஞான ரீதியில் முழுமையாக நிவாரண நிதி வழங்க வேண்டும். விவசாய கடன் கொள்கை மாற்றப்பட வேண்டும். தேசிய வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்