அப்போது சச்சினுக்கு 12 வயது. எப்படியாவது இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிவிட வேண்டுமென்ற முனைப்பு அவர் நெஞ்செங்கும் பரவிக் கிடந்தது. கோச் சொன்னதைவிடவும் அதிக நேரம் கிரவுண்டில் இருந்தார் சச்சின். திறமையுடன் கூடிய பயிற்சி அவரை 16-வது வயதிலே இந்தியாவுக்காக விளையாட வைத்தது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்துவிட்டது. 12 வயதில் தினம் 12 மணி நேரம் பயிற்சி எடுத்த சச்சின் அதன் பின்னரும் தினம் 12 மணி நேரம் பயிற்சி எடுத்திருப்பாரா? இல்லை. அப்படியென்றால், கிரிக்கெட் மீது சச்சினுக்கு ஆர்வம் போய்விட்டது என அர்த்தம் ஆகுமா? அல்லது, இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்ததும் சச்சின் அதை துச்சமென நினைத்தாரா?
இவை எதுவுமில்லை என உங்களுக்கும் தெரியும். சச்சினுக்கு வாழ்க்கை கிரிக்கெட்தான். ஆனால் அதோடு மட்டும் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. மற்றவற்றுக்காகக் அவர் கிரிக்கெட்டை விட்டுவிடவுமில்லை. ஃபோகஸ் கிரிக்கெட் மட்டுமே என்பதிலிருந்து `கிரிக்கெட்டும்’ என மாறுவதில் தவறில்லை. இனி, கிரிக்கெட் தன்னைக் கைவிடாது என்ற நம்பிக்கை வந்தபின் `Sit back and relax’ என்பார்களே, அப்படி கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்வதுதான் அது. இந்த உதாரணத்தில் சச்சின் இடத்தில் காதலர்களையும், கிரிக்கெட் இடத்தில் ரிலேஷன்ஷிப்பையும் பொருத்திப் பார்க்கலாம்.

கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து ரிலெஷன்ஷிப்புக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அவர்கள், கொஞ்ச காலம் கழித்து மேற்படிப்பு அல்லது கரியருக்காக முழு கவனத்தையும் அதில் செலுத்தத் தொடங்கும்போது இந்தப் பிரச்னை தொடங்கும். வேலைக்குச் செல்லும் நபர் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையும்போது, `திருமணத்துக்குள்ள நல்ல வீடு வாங்கி செட்டில் ஆயிடணும். அதுக்கு உழைக்கணும்’ என ஃபோகஸ் கொஞ்சம் பகிரப்படும்போதும் இந்தப் பிரச்னை வரலாம். நண்பர்கள், அவர்களுடனான தருணங்கள் அனைத்தையும் காதலுக்காக ஒதுக்கிய ஒருவன், ரிலேஷன்ஷிப்பில் செட்டில் ஆன பின் மீண்டும் நண்பர்கள் பக்கம் திரும்பும் போதும் இந்தப் பிரச்னை வரலாம். அனைத்து ரிலேஷன்ஷிப்பிலும் இந்தப் பிரச்னை வருமென்றாலும் திருமணத்துக்குப் பிறகு இது அதிகம் நிகழும். ஒரு பெண் ஓர் ஆணையோ அல்லது ஓர் ஆண் ஒரு பெண்ணையோ காதலிக்கிறார்கள். அதை உறுதி செய்யவே பெரிய பிரயத்தனம் செய்திருப்பார். அந்த காதல் வளர்ந்து திருமணம் நோக்கி செல்லும். இரண்டு வீட்டிலும் சம்மதம் வாங்கவும் ஒரு போராட்டம் நடந்திருக்கும். எல்லாம் நல்லபடியாக நடந்து திருமணம் முடியும்வரை அவரின் ஃபோகஸ் அந்த உறவின் மீது மட்டுமே இருந்திருக்கும். அது நல்லபடியாக நடந்து, திருமணம் ஆனதும் சில நாள்கள் கழித்து, அவர் வாழ்வின் மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கலாம். அப்போது இயல்பாகவே பார்ட்னர் மீது கொஞ்சம் கவனம் குறையலாம். அதற்குக் காரணம், இணை மீதான வெறுப்பாகத்தான் இருக்க வேண்டும் என இல்லை. மேலே சொன்னது போல `Sit back and relax’ ஆக இருக்கலாம் இல்லையா?
இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அரிதாக சிலர், உண்மையிலே மாறிவிடலாம். காதல் கைகூடிய பிறகு பார்ட்னரை ‘`Taken for granted’ ஆக நடத்தலாம். அதற்கு வாய்ப்பே இல்லை எனச் சொல்லிவிட முடியாது. ஆனால், இரண்டுக்கும் இடையே இருப்பது மெல்லிய கோடுதான். அந்த வித்தியாசத்தை நாம் உணராமல் போனால் ரிலேஷன்ஷிப்பே பிரச்னைதான். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்பது?

எல்லா உறவுக்கும் அடிப்படை, காதல் மட்டுமல்ல; மரியாதையும்தான். இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறையலாம்; தவறில்லை. ஆனால் மரியாதை குறைந்தால் அது Taken for granted என்பதற்கான சமிக்ஞைதான். அப்படி உங்களுக்கான மரியாதை குறைவாதாகத் தோன்றினால் உடனே உங்கள் பார்ட்னரிடம் பேசுங்கள். அவருக்கு என்ன பிரச்னை என்பதை அறிய முயலுங்கள். அது உங்களை மட்டுமல்ல; ரிலேஷன்ஷிப்பையே காப்பாற்றும் முயற்சி என்பதை உணருங்கள்.
வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் மீது உங்கள் பார்ட்னரின் கவனம் போவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், ஒரு கமிட்டெட் ரிலேஷன்ஷிப் என்றான பின் ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை இருக்க வேண்டும். யாரால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்தே ஆக வேண்டும். கரியர் அல்லது பெர்சனல் என எதைப் பற்றியதாக இருந்தாலும், அதில் முக்கிய விஷயங்கள் பற்றி பேசும்போது இருவரும் கவனமெடுத்து உரையாட வேண்டும். அதைச் செய்யக் கூட நேரமில்லாமல் போகும்போது நிச்சயம் சிக்கல்தான். இருவரும் சேர்ந்து வாழ்க்கையைச் சமாளிப்பதும், ரசிப்பதும், அனுபவிப்பதும்தானே ரிலேஷன்ஷிப்பின் அடிப்படை? அப்படியிருக்கும் போது ஒருவர் அதிலிருந்து தவறினால் இன்னொருவரையும் அது பாதிக்கும். `உன் லைஃப். நீயே முடிவு பண்ணிக்கோ’ என்பது போன்ற பதில்கள் வந்தால் அதுவும் Taken for granted-தான். அதை அனுமதிக்காதீர்கள்.
If effort is full, result doesn’t matter என்பார்கள். நிஜமாகவே உங்கள் பார்ட்னர் பிஸி ஆக இருக்கலாம். உங்களுக்காக எதோ ஒன்றைச் செய்ய விரும்பி, அவர் சூழல் காரணமாக செய்ய முடியாமல் போகலாம். அதைகூட புரிந்துகொள்ளாதவர் அல்ல நீங்கள். அதே சமயம், அதற்கான எஃபர்ட்டை உங்கள் இணை தந்தாரா என்பதை கவனியுங்கள். உங்களுக்காக எந்த முயற்சியும் எடுக்காத ஒருவர் வெறும் சொற்களினால் தரும் ஆறுதலால் பயனில்லை. `நான் இதைச் செய்ய முயற்சி செஞ்சேன். ஆனா இதனால பண்ண முடியல’ என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும் முயற்சியையாவது அவர் செய்ய வேண்டும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அதைச் செய்யாத போது அந்த உறவை அவர் Taken for granted ஆகத்தான் எடுத்துக் கொள்கிறார் என்றாகும்.

ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாலே மற்ற எல்லோரையும், எல்லாவற்றையும் தள்ளி வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், முன்னுரிமை நீங்களாகத்தான் இருக்க வேண்டும். இதுவும் ஆண், பெண் இருவருக்குமே பொதுவான விஷயம்தான். ஒருவர் இன்னொருவருக்கு அந்த பிரியாரிட்டியைக் கொடுக்கவில்லையென்றால், அதை Taken for granted ஆகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதே சமயம், காதலன்/காதலி மட்டுமே போதுமென வாழ முடியாது. நண்பர்களும் மற்றவர்களும் தேவை.
முன்னுரிமை என்பது மனிதர்கள் தொடர்புடைய விஷயம் மட்டுமன்று. உங்களிடம் உங்கள் பார்ட்னர் ஓர் உறுதிமொழி தந்திருக்கலாம். இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என்றோ, இனிமேல் நீயில்லாமல் இதைச் செய்ய மாட்டேன் என்றோ… எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை அவர் மீறுவதுகூட முன்னுரிமையை விட்டு கொடுப்பதுதான். அதைப் பற்றி கேட்கும்போது அதற்காக மன்னிப்பு கேட்டாலோ, குறைந்தபட்சம் அது தவறென உணர்ந்தாலோ பிரச்னை அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால், `எப்பவோ சொன்னத இப்ப ஏன் பிடிச்சிட்டுருக்க?’ என உங்கள் பார்ட்னர் கேட்டால், அங்கே அவர் உங்களை Taken for granted எடுத்துக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம்.
பெரும்பாலும் ரிலேஷன்ஷிப்புக்குள் மூன்றாவதாக நண்பர் ஒருவர் வரும்போது பிரச்னைகள் வரலாம். இருவருக்குமான தனிப்பட்ட தருணங்களை அந்த மூன்றாம் நபரும் பகிர்ந்துகொள்வது ஒருவருக்குப் பிரச்னை இல்லாமலும், இன்னொருவருக்கு உலகப் போரே தொடங்கும் பிரச்னையாகவும் இருக்கலாம். அதுவும் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி என இப்போது வேறு நிறைய நண்பர்கள்.