நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயில், பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா கண்டது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெற்றது.

அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இனிவரும் ஆண்டுகளில் ஜனவரி 22, சிறப்புமிக்க நாளாக இருக்கும். அனைத்து ராம பக்தர்களின் நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றிய நாள் இது. ஜனவரி 22 மாபெரும் இந்தியாவின் தொடக்கம். ராமர் இல்லாத நாட்டைக் கற்பனை செய்பவர்களுக்கு, நம் நாட்டைப் பற்றி நன்கு தெரியாது.
அத்தகையவர்கள் காலனித்துவ காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மேலும், ராமர் கோயில் இயக்கத்தைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த நாட்டின் வரலாற்றை யாரும் படிக்க முடியாது. 1528 முதல், ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்து வந்தது. இந்த விவகாரம் நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இறுதியாக இந்தக் கனவு மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.” எனக் கூறினார்.
இந்த நிலையில், “ஜனவரி 22 மூலம், நாட்டில் ஒரு மதத்தை இன்னொரு மதம் வென்றது என்ற செய்தியை மோடி அரசு கூற விரும்புகிறதா?” என ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.பி அசாதுதீன் ஒவைசி மக்களவையில் பா.ஜ.க-வை நோக்கி கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ராமர் கோயில் தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது இவ்வாறு கேள்வியெழுப்பிய அசாதுதீன் ஒவைசி, “நான் கேட்கிறேன்… இந்த மோடி அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அரசா, இல்லை முழு நாட்டுக்குமான அரசா… இந்திய அரசுக்கென்று தனி மதம் இருக்கிறதா… இந்தியாவுக்கென்று மதம் இல்லை என்றுதான் நான் நம்புகிறேன். இருப்பினும், ஜனவரி 22-ன் மூலம் ஒரு மதம் இன்னொரு மதத்தை வென்றுவிட்டது என்ற செய்தியைத்தான் இந்த அரசு கூற விரும்புகிறதா… இதன் மூலம் நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு என்ன செய்தியை நீங்கள் கூறுகிறீர்கள்… நான் என்ன பாபர், ஜின்னா, ஒளரங்கசீப்பின் செய்தித் தொடர்பாளரா… ராமரை நான் மதிக்கிறேன். அதேசமயம், நாதுராமை வெறுக்கிறேன். ஏனெனில், `ஹே ராம்’ என இறுதி வார்த்தைகளைக் கூறிய மனிதனைக் கொன்றவர் அவர்” என்று கூறியவர், உரையை முடிக்கும்போது, “பாபர் மசூதி ஜிந்தாபாத்… பாபர் மசூதி இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்” என்று கூறி உரையை முடித்தார்.