வள்ளலார் இசை ஆல்பம் வெளியிட்ட சத்யா

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த அருட்பிரகாச வள்ளலார் அருளிய 'மனு முறை கண்ட வாசகம்' பாடலுக்கு இசை அமைத்து, பாடி அதனை வீடியோவாகவும் வெளியிட இருக்கிறார், திரைப்பட இசை அமைப்பாளர் சி.சத்யா. அவர் வள்ளலாரின் தீவிர பக்தர். வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சத்யா கூறும்போது, “வள்ளலார் நமக்கு வழங்கியுள்ள அற்புதமான வழிகாட்டு பாடல்களில் ஒன்று தான் 'மனு முறை கண்ட வாசகம்'. 'நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ… நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ…”என்று செல்லும் இப்பாடலின் அறநெறிகளை பின்பற்றினாலே போதும், உலகில் அன்பு சூழ்ந்து அமைதி நிலவும். எனவே, இந்த பாடலை இன்னும் அதிகமானோருக்கு எடுத்து செல்லும் வகையில் இசையமைத்து பாடியுள்ளேன்.

அன்பும் அறமும் மட்டுமே உலகத்தையும் மக்களையும் தழைக்க செய்யும் மந்திரங்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வள்ளலார் போதித்த இவை இன்றைய நவீன உலகத்திற்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன. இப்பாடலை வள்ளலார் வழி நடப்போர் மட்டுமின்றி அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.