Doctor Vikatan: கடுக்காய் பொடி சாப்பிட்டால் மலச்சிக்கல், முதுமைத்தோற்றம் விலகுமா..?

Doctor Vikatan: தினமும் இரவில் கடுக்காய் தூள் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்கும் என்றும், முதுமையை விரட்டி, என்றும் இளமையோடு வைக்கும் என்றும் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா…. யார் வேண்டுமானாலும் கடுக்காய் எடுத்துக் கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். கடுக்காய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருக்கின்றன. அதனால் இதை ஒரு காயகற்ப மருந்தாக சித்த மருத்துவத்தில் பல்லாண்டு காலமாகப் பயன்படுத்துகிறார்கள். 

திரிபலா சூரணத்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என மூன்றும் சேர்க்கப்பட்டிருக்கும். இதுவும் ஒரு காயகற்ப மருந்துதான். மலத்தை இளகச் செய்து, உடல் கழிவுகளை நீக்கும் தன்மை கொண்டது கடுக்காய். உணவுமுறையில் துவர்ப்புச்சுவைக்கென பெரும்பாலும் நாம் எதையும் எடுத்துக்கொள்வதில்லை.

கடுக்காய்

வாழைப்பூவில் துவர்ப்புச்சுவை உண்டு. அதை மட்டும் எப்போதாவது எடுத்துக்கொள்கிறோம். அந்த வகையில் கடுக்காயைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் துவர்ப்புச்சுவை நம் உடலில் சேரும்.

கடுக்காய்க்கு நரை, திரை, மூப்பு போக்கும் தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், கூந்தல் நரைக்காமல் மெலனின் நிறமிகளைப் பாதுகாக்கக்கூடியவை. சருமத்தில் சுருக்கங்கள் வராமலும், முதுமையடையாமலும் காக்கக்கூடியதும்கூட. கடுக்காய் எடுத்துக்கொண்டால் ‘கிழவனும் குமரன் ஆகலாம்’ என்றும் சொல்லப்படுவதுண்டு. தொடர்ந்து சிறு வயதிலிருந்தே கடுக்காய் எடுத்து வருபவர்களுக்கு முதுமை தள்ளிப்போவதாக  ஒரு நம்பிக்கை உண்டு.

கடுக்காயை மருந்தாகவே பயன்படுத்த வேண்டும். 48 நாள்கள் எடுத்துக்கொண்டு ஓர் இடைவெளி விட வேண்டும். தொடர்ந்து சாப்பிடக்கூடாது. கடுக்காய் சாப்பிட்டால்தான் மலம் கழிக்க முடியும் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள். அது தவறு. வயதானவர்கள் கடுக்காயை தினமும் சாப்பிடலாம்

காலை சுக்கு, மதியம் இஞ்சி, இரவு கடுக்காய் சாப்பிடுவது சரியான ஃபார்முலா.  சுக்கை காபியாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சியை துவையலாக, சட்னியாக எடுத்துக் கொள்ளலாம்.  கடுக்காயை நேரடியாக கடுக்காய் சூரணமாகவோ அல்லது திரிபலா சூரணமாகவோ எடுத்துக்கொண்டால் நல்ல பலன்களைத் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.