இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பங்கேற்கவில்லை.
அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விலகியிருப்பதாக பிசிசிஐ விளக்கம் அளித்திருந்தாலும் குறிப்பிட்ட காரணம் ஏதும் சொல்லவில்லை. தற்போது 3வது மற்றும் 4வது போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ், “விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது.

அவர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போது குடும்பத்துடன் நேரம் செலவளித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் விராட் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து விலகி இருக்கிறார். அவர் எடுத்திருப்பது சரியான முடிவுதான்” எனக் கூறியிருந்தார். டிவில்லியர்ஸ் கோலியின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்தத் தகவல் உண்மையாகத்தான் இருக்கும் என கோலியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது விராட் கோலி குறித்து தான் கூறிய தகவல் உண்மையல்ல என்று டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “நான் தவறு ஒன்றைச் செய்துவிட்டேன். விராட் கோலி குறித்து நான் கூறிய தகவல் உண்மையல்ல. அவரது விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது.

அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த இடைவெளிக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர் அதிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.