சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சிசார்பில் கடந்த 2023 ஜூனில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த நவம்பரில் பிரதான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த ஜன.5-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதான தேர்வில் விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படவில்லை என குற்றம்சாட்டி, நேர்முகத் தேர்வுக்கு தடை கோரி பிரதான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு மனுவில், ‘சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற போட்டித் தேர்வு அமைப்புகள், தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகின்றன.
சிவில் நீதிபதிகளுக்கான… ஆனால், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு மட்டும் விடைத்தாள்களை வழங்க டிஎன்பிஎஸ்சி மறுக்கிறது. எங்களின் விடைத்தாளை வழங்க டிஎன்பிஎஸ்சி-க்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை நேர்முகத் தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.