செல்போன் செயலி முதலீடு விவகாரம்: காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது

கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அந்த செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால், தினமும் ரூ.1,000 வரை வருவாய் ஈட்டலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

இதை நம்பிய லட்சக்கணக்கானோர், அந்த செயலியில் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு முதலீடு பெற்றது தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சத்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது, மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த பலர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தங்களது நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆணையரிடம் முறையிட வேண்டும் என்று அவர்கள் போலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆனால், காவல் ஆணையைர சந்திக்க முடியாததால், அலுவலக வளாகத்திலேய தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 180 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதற்கிடையே, தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக மேலும் பலர், ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப் பட்டனர். அப்போது தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக அங்கு வந்த சிலரை, போலீஸார் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.