சென்னை: வானிலை ஆய்வுக்கான ‘இன்சாட்-3டிஎஸ்’ அதிநவீன செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் பார்வையிட இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.
வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)சார்பில் ‘இன்சாட்’ வகை செயற்கை கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வானிலை ஆய்வுக்காக, இன்சாட்-3டிஎஸ்எனும் அதிநவீன செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் பிப்ரவரி 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும்ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.
6 சேனல் இமேஜர்: இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக் கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர்உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் உள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை போன்றஇயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஏற்கெனவேவிண்ணில் செயல்பாட்டில் உள்ளஇன்சாட்-3டி மற்றும் 3டிஆர் செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியாக, இன்சாட்-3டிஎஸ் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரில் பார்வையிட முன்பதிவு: இன்சாட்-3டிஎஸ் செயற்கைக் கோள் ஏவுதல் நிகழ்வை பள்ளி,கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நேரில் பார்வையிட இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளம் வழியாக இன்று (பிப்.12) மாலை 6.30 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.