பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இச்சந்திப்பில், பிரதமர் செயலாளர், அரச அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களில் 8 வீதமானோருக்கே வீடுகள் இருக்கின்றன, தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் இது மிகவும் பின்தங்கிய நிலையாகும். இந்த வரலாற்று தவறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

பொருத்தமான காணியை அடையாளம் காணுதல், பயனாளிகளை தெரிவு செய்தல், வரைபடம் தயாரித்தல், அளவீடு செய்தல், உரித்து தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் பணிகள் முன்னெடுக்கப்படும்.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம்…

1. இத்திட்டம் ஊடாக 2 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்.
2. செயன்முறையை ஒருங்கிணைக்க செயலகமொன்று ஸ்தாபிக்கப்படும்.
3. இத்திட்டத்துக்காக ஜனாதிபதியால் 4 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

200 வருடங்களாக இந்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்த பெருந்தோட்ட மக்கள், அவர்கள் தமக்கே உரிய காணியில் நிம்மதியாக வாழ்வதற்குரிய சுதந்திரத்தை இன்னும் பெறவில்லை.

இலங்கை பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதே இதன்நோக்கம். காணி உட்பட அம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன், என்றும் அமைச்சர் தனது முகப்புத்தகப் பதிவில் இவ்வாறு பதிவபிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.