ராணிப்பேட்டை மாவட்டம், இச்சிபுத்தூர் கிராம ஊராட்சியிலுள்ள பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ராமச்சந்திரன். இவர் கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘‘இச்சிபுத்தூர் ஊராட்சியில் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் மின் விளக்குகள், ஆழ்துளைக் கிணறுகள், பம்பு செட்டுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பணிகள் நடைபெறவே இல்லை. செய்யாத பணிகளைச் செய்ததாகக் கூறி, கையாடல் செய்திருக்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன், ஊராட்சி செயலர் இப்ராஹிம் ஆகியோர்தான் போலியாகக் கணக்கு காட்டி, ரூ.2.48 கோடி பணத்தை முறைகேடாக எடுத்திருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக, மாவட்ட ஆட்சியர் தொடங்கி ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகாரளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, அரசுப் பணத்தை முறைகேடாக எடுத்த இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்யவும், உடந்தையாக இருந்த ஊராட்சி செயலாளர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ‘இது தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக’ தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘முறைகேடு புகார் தொடர்பாக, இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றுகூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ராமச்சந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலையே நடக்காமல் பணம் கையாடல் செய்யப்பட்டதாக வாதிட்டு, அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். மேலும், மனுதாரர் தாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் வரும் 19-ம் தேதி ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறார். இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியத்திலுள்ள மோசூர் கிராம ஊராட்சியிலும், நாடக மேடை, பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுவிட்டதாக… செய்யாத அந்தப் பணிகளைச் செய்ததாகக் கூறி லட்சக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு புகார் எழுந்ததும், குறிப்பிடத்தக்கது!