‘இது நமக்கான கடைசி வாய்ப்பு. இங்கே நாம் சாதித்துக் காட்ட வேண்டும். நமது குடும்பத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த வேண்டும். Come On Boys…’ இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் முன்பாக சகவீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் இப்படித்தான் நம்பிக்கை ஊட்டியிருந்தார்.

ஆனால், உதய் சஹாரனின் நம்பிக்கை பலிக்கவில்லை. இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை. ஆம், சீனியர் உலகக்கோப்பையை தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது ஆஸ்திரேலியா.
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியே டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. ஆஸ்திரேலிய அணியும் ஒன்றும் சிறப்பாக பேட்டிங் ஆடிவிடவில்லை. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்திய அணியின் பௌலர்கள் டைட்டாக வீசி ஆட்டத்தின் லகானை தங்களின் கைக்குள்ளேயே வைத்திருந்தனர். ஓப்பனர்களில் ஒருவரான சாமை இந்திய பௌலர் லிம்பானி அற்புதமான இன்ஸ்விங் ஒன்றில் கச்சிதமாக போல்டாக்கி வீழ்த்தியிருந்தார். டிக்சன், வேஜன் என இருவர் கொஞ்ச நேரம் நின்று பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். அவர்களுமே ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் அசௌகரியமாகத்தான் ஆடியிருந்தனர். ஸ்பின்னர்களின் ஸ்பெல்லை முடித்து கொஞ்சம் அடி வாங்கியிருந்த நமன் திவாரியிடம் இந்திய கேப்டன் பந்தை ஒப்படைத்தார்.
ரன்ரேட்டை ஏற்ற வேண்டும் என்கிற நோக்கில் இவரின் பந்தில் ரிஸ்க் எடுக்க முயன்றனர். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் காலி. டிக்சன், வேஜன் இருவரையுமே நமன் வீழ்த்தியிருந்தார். இதன்பிறகு, ஹர்ஜாஸ் சிங் பொறுப்பாக நின்று ஒரு அரைசதம் அடிக்க, இறுதியில் பீக் என்பவர் அணிக்குத் தேவையான முக்கிய ரன்களை அடித்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவை 250 ரன்களை கடக்க வைத்தனர்.
இந்திய அணிக்கு இலக்கு 254. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிகளில் எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்ததில்லை. அந்த சாதனையை இளம் இந்திய படை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி ஆகியோர்தான் ஓப்பனர்கள். 10 வது பந்தில்தான் முதல் ரன்னையே எடுத்தனர். முதல் 10 ஓவர்களிலும் தற்காப்பு ஆட்டம்தான் ஆட வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. ஆனால், இந்த எண்ணம் சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சின் உதவியால் கிடைக்கும் பவுன்சை கடந்து தங்களின் அதீத சிரத்தையால் பந்தை இன்னும் அதிகமாக பவுன்ஸ் ஆக வைத்தனர். டீப் தேர்டுமேன், டீப் பைன் லெக், இரண்டு ஸ்லிப்களை வைத்துவிட்டு தொடர்ச்சியாக பந்தை திமிறி எழ செய்வதுதான் ஆஸ்திரேலிய பௌலர்களின் வேலையாக இருந்தது. இதை இந்திய பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. எகிற வந்த பந்துகளை தொடர்ச்சியாக லெப்ட் செய்து கொண்டே இருந்தனர். கொஞ்சம் வழக்கமான லெந்தில் கீழிறங்கி வந்த பந்துகளுக்கு யோசிக்காமல் பேட்டை விட்டனர். இதுதான் இந்தியாவிற்கு எமனாக அமைந்தது. விட்லர், ஆண்டர்சன், பியர்ட்மேன் போன்றோர் விக்கெட்டுகளாக எடுக்க ஸ்பின்னரான மேக்மிலனும் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்தினார். நம்பிக்கை நட்சத்திரங்களான கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகியோரால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் முருகன் அபிஷேக் மட்டும் கொஞ்சம் நின்று வேகவேகமாக ரன்கள் சேர்த்து போராடினார். ஆனால், அதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவை 250 ரன்களை கடக்கவிடாமல் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அதேமாதிரி, பேட்டிங்கில் முதல் 10 ஓவர்களை பாசிட்டிவான மனநிலையோடு அணுகியிருக்க வேண்டும். இதுபோக, அரையிறுதியில் இக்கட்டான சூழலில் உதயும் சச்சினும் அமைத்ததை போல இங்கே ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை ஒரு கூட்டணி அமைத்திருக்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை. விளைவு, உலகக்கோப்பை கையை விட்டு நழுவியிருக்கிறது.

ஆஸ்திரேலியா நான்காவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்திய ரசிகர்களுக்கு சீனியர்களும் ஏமாற்றமளிக்க ஜூனியர்களும் ஏமாற்றமளித்திருக்கின்றனர்.