உடுப்பி : ”அதிகரித்து வரும் குரங்கு நோய்க்கான தடுப்பூசியை தயாரிக்க, ஐ.சி.எம்.ஆர்., ஒப்புக் கொண்டுள்ளது. அடுத்தாண்டு முதல் தடுப்பூசி கிடைக்கும்,” என, சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
உடுப்பியில், குரங்கு நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாக, நேற்று சுகாதார துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பருவமழை துவக்கத்திலும், இறுதியிலும் குரங்கு நோய் அதிகரிக்கும். மார்ச் வரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால், பொது மக்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
சிக்கமகளூரு, ஷிவமொகா, உத்தர கன்னடா மாவட்டங்களில் இந்நோயால் 70 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்க, ஐ.சி.எம்.ஆர்., என்ற இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அடுத்தாண்டு முதல் குரங்கு நோய் தடுப்பூசி கிடைக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement