கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு MyV3Ads என்ற செயலியை, சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். விளம்பரம் பார்த்தால் பணம் என்று ஆசை வார்த்தை கூறி இயங்கி வரும் இந்த நிறுவனம், சமீபகாலமாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது, தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலிப்பதாகச் சொல்லி, அந்த நிறுவனம்மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர். தொடர்ந்து MyV3Ads நிறுவனம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக காவல்துறை கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்தி ஆனந்தனிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் MyV3Ads நிறுவனம் குறித்து அவதூறாகப் பேசி வருபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக்தி ஆனந்தன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகரக் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சக்தி ஆனந்தன், ”கடந்த 31 மாதங்களாக முறையாக நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. சிலர் அளித்த பொய்யான புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். சில யூட்யூபர்ஸ் 20,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.



வருகிற திங்கள்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்க உள்ளோம். தவறான செய்தி வெளியிடும் யூட்யூபர்ஸ் வீடுகளை முற்றுகையிடுவோம். விசாரணையில் நல்லவன் என நிரூபிப்பேன். முகாந்திரம் இல்லாமல் மோசடி செய்ததாகப் பேசக் கூடாது. இதனால் 60 லட்சம் பேர் வாழ்க்கை பாதிக்கப்படும். என்மீதான குற்றம் நிரூபிக்கும் வரை அவதூறு பேசக் கூடாது” என்றார்.
தொடர்ந்து, காவல் ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என MyV3Ads நிறுவனத்தின் உறுப்பினர்கள் அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது உறுப்பினர்கள் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உறுப்பினர்கள் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட நிலையில், சக்தி ஆனந்தனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சக்தி ஆனந்தனுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் சில உறுப்பினர்கள் ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க திரள்வார்கள் என்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் MyV3Ads ஆப் வேலை செய்யவில்லை. இதனால் பதற்றமடைந்த உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில், ‘ஆப் வேலை செய்யவில்லை.’ என பதிவிட்டனர்.

“சர்வர் அப்டேட் பணிகள் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆப் மீண்டும் வழக்கம் போல் செயல்படும். யாரும் பயப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள்.” என்று அந்த நிறுவனத்தினர் விளக்கமளித்துள்ளனர்.