இசை அமைப்பாளர் சங்க தலைவர் தேர்தல் : தினா மீண்டும் போட்டி

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்த்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. வரும் 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்த தினா மீது எதிர்தரப்பினர் ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். சங்கத்தின் நிதியை தவறாக கையாண்டார். தனக்கு வேண்டியவர்களை உறுப்பினராக்கி தன் பலத்தை அதிகரித்து கொண்டார். என்பது அவற்றில் முக்கியமானது. இசை அமைப்பாளர் இளையராஜாவும் தினா பதவி வகித்தது போதும் மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் 3வது முறையாக சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தினா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சங்கத்தின் அசோசியேட் உறுப்பினர்களுக்கு எந்த வகை சலுகைகளும் இல்லாமல் இருந்ததோடு, அவர்களுக்கு வாக்கு உரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இதுபற்றி பலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நான் முயற்சி மேற்கொண்டு அவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுத்தேன்.

தற்போது மூன்றாவது முறை நான் தலைவராக வெற்றி பெற்றால், அசோசியேட் உறுப்பினர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க பாடுவேன். திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தான் முதல் சங்கம். ஆனால், எங்கள் கட்டிடம் இன்னும் பழமையாகவே இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். நான் முதல் முறையாக தலைவராக வந்தபோதே இதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், கொரோனா பாதிப்பு வந்ததால் தடைப்பட்டு விட்டது. தற்போது நான் மீண்டும் தலைவரான பின்பு இந்த முறை சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவேன். என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.