சென்னை சூப்பர் கிங்ஸ் 13வது முறையாக இதனை நிச்சயம் செய்யும்: சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பெரிய கணிப்பை கூறியுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் சிறப்பாக சிஎஸ்கே செயல்பட்டதாக தெரிவித்திருக்கும் அவர், எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் 13வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார். வேறு எந்த அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக இத்தனை முறை ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில்லை என்பதையும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கில் பின்னடைவை சந்தித்த நிலையில், அதற்கு ஏற்ப வீரர்களை குறிவைத்து ஐபிஎல் 2024 ஏலத்தில் வாங்கியிருப்பதாகவும், மிடில் ஆர்டரில் ராயுடு ரிட்டையர் ஆகி இருப்பதால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு தகுதியான வீரர்களையும் சிஎஸ்கே வாங்கியிருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணி செல்லும் என வேறு எந்த அணியையும் தன்னால் உறுதியாக சுட்டிக்காட்ட முடியவில்லை எனவும் கவாஸ்கர் கூறியிருக்கிறார். ஏனென்றால் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் முதல் 4 இடங்களை உறுதி செய்துவிடுகிறது. இம்முறையும் முதல் நான்கு இடங்களை அந்த அணி பிடிக்கும் என கவாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.  

12 முறை இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அதில் 5 முறை சாம்பியன் பட்டத்தையும் சிஎஸ்கே கைப்பற்றியிருக்கிறது. “ ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களுக்கு அணியில் எந்தெந்த இடத்தில் பலப்படுத்த வேண்டுமோ அந்தந்த இடத்துக்கு தேவையான வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு பவுலிங்கில் சிஎஸ்கே சிறிது பலவீனமாக தெரிந்தது. இம்முறை அதற்கு ஏற்ற பிளேயர்களை ஏலத்தில் வாங்கியது. மிடில் ஆர்டரில் ராயுடு இல்லை. அவரது இடத்துக்கான பிளேயர் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மூத்த மற்றும் இளம் வீரர்கள் சரியான கலவையில் இருக்கும் ஒரு அணியாக சிஎஸ்கே இருக்கிறது. 

அந்தவகையில் பார்க்கும்போது நிச்சயமாக சொல்வேன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு இம்முறை தகுதி பெறும். வேறு எந்த அணியையும் என்னால் அவ்வாறு சொல்ல முடியாது. கடந்த 16 ஐபிஎல் போட்டிகளில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஒரே அணி சிஎஸ்கே தான். அதனால் தான் சொல்கிறேன் 13வது முறையும் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வார்கள்” என கவாஸ்கர் கூறியிருக்கிறார். 

ஐபிஎல் 2024 ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய அனைத்து வீரர்களின் பட்டியல்: 

ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.8 கோடி), ஷர்துல் தாக்கூர் (ரூ 4 கோடி), டிரைல் மிட்செல் (ரூ. 14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ 8.4 கோடி), முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ. 2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ. 20 லட்சம்).

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே, மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.