புஜாரா எங்களுக்கு ட்ரீட் கொடுப்பாருனு எதிர்பார்க்கிறோம் – அஸ்வின்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கும் இந்திய அணி, அந்த அணியுடன் பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டிக்கு முன்னதாக சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பாக மண்ணின் மைந்தர்களான புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கவுரவிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இருவரும் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி பெருமை சேர்ந்திருப்பதால் புஜாரா மற்றும் ஜடேஜாவை சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கவுரவிக்கிறது. ஜடேஜா இந்திய டெஸ்ட் அணியில் இருந்தாலும், புஜாரா இப்போது நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இல்லை. 

இந்த சூழலில் புஜாராவின் அழைப்பை எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு எல்லா இந்திய அணி வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். ராஜ்கோட் டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் இணைய உளனர். இப்போட்டி இந்திய அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு சொந்த மைதானமான ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. உள்ளூர் மைந்தன் அவர். 100 டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்காக விளையாடிய புஜாரா இந்திய அணியில் இல்லையென்றாலும் அவருக்காக இப்போட்டியில் நாங்கள் விளையாடுவோம். 

புஜாரா ஜாம்நகரை சேர்ந்தவர் என்றாலும் இந்த மைதானம் தான் அவருக்கு சொந்த மைதானம். எனவே இந்திய அணி வீரர்கள் எல்லோரையும் டின்னருக்கு அவர் அழைப்பார் என எதிர்பார்க்கிறேன். தனது வீட்டிற்கு அழைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். “ என தெரிவித்துள்ளார். இதேபோல் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றபோது, அப்போது அணியில் இருந்த புஜாரா அனைத்து இந்திய வீரர்களையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார்.

ஆனால் அவர் இப்போது அதேபோல் செய்வாரா? என தெரியவில்லை. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவருடைய இடத்துக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இவரும் சிறப்பாக ஆடாமல் விமர்சனத்துக்குள்ளாகி, இடம் கேள்விக்குறி என்ற சூழலுக்கு வந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து, தனது இடத்தை உறுதி செய்து கொண்டார். 

இருப்பினும் புஜாரா இப்போது செம பார்மில் தான் இருக்கிறார். ரஞ்சி போட்டியில் சதமடித்து தன்னுடைய பார்மை நிரூபித்திருப்பதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய பெயரை பிசிசிஐ கருத்தில் கொள்ளவில்லை. தொடர்ந்து சிறப்பாக புஜாரா ஆடும்பட்சத்தில் மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்குள் வருவதற்கான வாய்ப்பும் ரஞ்சி டிராபி சதம் மூலம் தென்பட தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.