மும்பை: தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் எந்தவிதத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது, இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தான் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இதை அரசியல்வாதிகள் பலர் கடைபிடிப்பதில்லை.
மும்பையில் சிவசேனா (ஷிண்டே அணியை) சேர்ந்த எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் என்பவர் ஹிங்கோலி பகுதியில் உள்ள பள்ளி விழா ஒன்றுக்கு சென்றார். அப்போது குழந்தைகளிடம் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தோஷ் பங்கர் தேர்தல் குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது அவர், ‘‘அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோரை எம்எல்ஏ சந்தோஷ் பங்கருக்கு ஓட்டு போட சொல்லுங்கள். இல்லையென்றால் நீங்கள் 2 நாட்களுக்கு சாப்பிடக் கூடாது. நீங்கள் சாப்பிடாமல் இருந்தால், ஏன் சாப்பிடவில்லை என உங்கள் அப்பா, அம்மா கேட்பார்கள். அப்போது எம்எல்ஏ சந்தோஷ் பங்கருக்கு ஓட்டு போடுங்கள், அப்புறம்தான் சாப்பிடுவோம் என நீங்கள் கூற வேண்டும். சரியா?’’ என்றார்.
எம்எல்ஏ.,வின் இந்த பேச்சைக் கேட்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் சிரித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(ஷரத்சந்ரா பவார்) செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், ‘‘ தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி பள்ளிக் குழந்தைகளிடம் பேசிய எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் பாஜக கூட்டணி எம்எல்ஏஎன்பதால், அடிக்கடி விதிமுறைகளை மீறுகிறார். அவர் மீது தேர்தல்ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.