சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.