ராஞ்சி: ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த வழக்கில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பிஎம்டபிள்யூ கார் ரூ.36.34 லட்சம் ரொக்கத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த கார், தனக்கு சொந்தமானது அல்ல என ஹேமந்த் சோரன் கூறினார். இதையடுத்து கார் பதிவு எண்-ஐ கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கார், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான கார் என தெரியவந்தது.
இவர், ஜார்கண்ட், வங்காளம், ஒடிசா மாநிங்களில் மதுபான விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.351 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹேமந்த் சோரன் வீட்டில், கார் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ராஞ்சியில் உள்ளஅமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி காங்கிரஸ் எம்.பி.தீரஜ் சாகுவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரிடம் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 9.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.