புதுடெல்லி: கடந்த 1995-2021-ம் ஆண்டுகள் இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களில் 5-ல் 4 பேர் ஆண்கள். இதில் பாலின பாகுபாடு நிலவுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கொரன்டலா மாதவ் என்பவர் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பிஇருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் சிங் பாகெல் கூறியிருப்பதாவது:
இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து தானமாக பெற்று கடந்த 1995-2021-ம் ஆண்டு இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 29,695 பேர் ஆண்கள், 6,945 பேர் பெண்கள். இந்த விகிதம் 4:1 என்ற அளவில், அதாவது 80 சதவீதமாக உள்ளது. உறுப்பு மாற்று அறுவை செய்த பெண்களின் சதவீதம் கடந்த 2019-ம் ஆண்டு 27.6 சதவீதமாக இருந்தது. அது 2022-ல் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களிடம் நில வும் பாலின வித்தியாசத்தை குறைக்க பல தரப்பினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் சிங் பாகெல் தெரிவித்தார்.