குவஹாத்தி: சிகிச்சை என்ற பெயரில் நடக்கும் மாந்த்ரீக நடைமுறைகளுக்கு முழுமையாக தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய, அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது, மிக விரைவில் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்டு உள்ள முக்கிய முடிவுகள் குறித்து, சமூக வலைதள பதிவில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளதாவது:
இந்த கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிகிச்சை என்ற பெயரில் மாந்த்ரீக நடைமுறைகளுக்கு முழு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மூடநம்பிக்கை
காது கேளாமை, பார்வையின்மை, பேச முடியாமை மற்றும் சில பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாந்த்ரீகம் செய்யப்படுகிறது.
மேலும், முற்றிலும் அறிவியலுக்கு முரணான முறையில் இதுபோன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.
இது போன்ற மூடநம்பிக்கைகளை முழுதும் தடை விதிக்கும் வகையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன்படி, மாந்த்ரீக நடைமுறையில் சிகிச்சை அளிப்பது முழுதும் தடை செய்யப்படும். அதை மீறினால், கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
மாநிலத்தில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், 10 முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இவை, இரண்டு இரண்டு நகரங்களாக ஜோடியாக பிரிக்கப்படும். இரண்டிலும் ஒரே மாதிரியான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை, துாய்மைப் பணி, குடிநீர் வசதி, போக்குவரத்து நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
மானியம் நிறுத்தம்
வனச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணியரை அதிகம் ஈர்க்கும் வகையிலும், நாம்தாங் காப்புக்காடு பகுதியில், 259 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று வெளியிட்ட மற்றொரு உத்தரவில், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு, மின்சாரத்துக்கான மானியம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்