Heavy security at Delhi borders to prevent entry of farmers | டில்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு விவசாயிகள் நுழைவதை தடுக்க அதிரடி

புதுடில்லி,டில்லியில் முற்றுகை பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள், வேளாண் பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்ல இன்று அழைப்பு விடுத்துள்ளன.

இந்த பேரணியில் பங்கேற்க, உ.பி., – பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லாரி மற்றும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிய போது, டில்லியின் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது போன்ற நிலைமை தற்போது ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய எல்லை பகுதிகளில், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

அதன்படி, டில்லியின் எல்லைகளில் இரும்பு வேலிகள், பெரிய கான்கிரீட் கலவைகளால் ஆன தடுப்புகள், சாலை தடுப்புகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எல்லைகளில் நடமாட்டத்தை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, டில்லியின் முக்கிய பகுதிகளிலும், எல்லைகளிலும், போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டில்லியின் எல்லை பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையே மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர், சண்டிகரில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.

144 தடை உத்தரவு

டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:விவசாயிகள் போராட்டத்தை கருத்தில் வைத்து, டில்லி முழுதும் வரும் மார்ச் 12ம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பேரணி, ஊர்வலம், சாலை மறியல், பொதுக்கூட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், டில்லியில் லாரிகள், டிராக்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.