Opposition parties have great confidence in our victory: PM Modis speech | எங்கள் வெற்றியில் எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை: பிரதமர் மோடி பேச்சு

ஜாபுவா : ”வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியில், எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மத்திய பிரதேசத்தில், 7,550 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பழங்குடியினர் மகாசபை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இங்கு நான் லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் சேவகனாக வந்துள்ளேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி எனப்படும், ‘டபுள் இன்ஜின்’அரசுகள் அமைந்துள்ளன. இதனால், மாநிலத்தில் இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன.

அதற்கு சிறந்த உதாரணமாகத் தான், 7,550 கோடி ரூபாய் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., குறைந்தபட்சம், 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கும் இதில் அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

வரும் தேர்தலில், இந்த வெற்றியை உறுதி செய்ய, ஒவ்வொரு பூத்திலும் முந்தைய தேர்தலைவிட, பா.ஜ.,வுக்கு, குறைந்தபட்சம் 370 ஓட்டுகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதிலும், ஏழைகள், விவசாயிகள், பழங்குடியினர் நலன்களை, காங்கிரஸ் புறக்கணிந்து வந்துள்ளது. ஆனால், தேர்தல் நடக்கும்போது மட்டும் கிராமங்களுக்கு செல்வர்.

தற்போது தோல்வி நிச்சயம் என்பது தெரிந்துவிட்டதால், பிரித்தாளும் சூழ்ச்சியில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தை மீது பரிவு!

மத்திய பிரதேசத்தின் ஜாபுவாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றபோது, தன் தந்தையின் தோளில் இருந்த ஒரு சிறுவன், தன் கையை ஆட்டியபடி இருந்தான்.இதைப் பார்த்த மோடி, ”உன் அன்பு எனக்கு கிடைத்தது. கையை ஆட்டிக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொள்ளவும்; கை வலிக்கப் போகிறது,”என, குறிப்பிட்டார்.

ஒழுக்க கல்வியே தேவை!

ஆரிய சமாஜம் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியின், 200வது பிறந்த நாளையொட்டி, அவர் பிறந்த குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு அடிமைத்தனத்தில் இருந்தபோதும், அதன் தாக்கத்தில் இருந்து விடுபடாத நிலையில் இருந்தபோதும், பல சமூக தீமைகள் நிலவிய காலத்தில் ஒழுக்கக் கல்வியை போதித்தவர், சுவாமி தயானந்த சரஸ்வதி.நம் வேதங்கள் உள்ளிட்ட நாட்டின் பாரம்பரியம், அதன் மதிப்புகளை மாணவர்களுக்கு கற்றுத் தரும் கல்வி முறையை அவர் அறிமுகப்படுத்தினார். இது தான் தற்போது நம் நாட்டின் தேவை. இந்த நோக்கத்துடன் தான், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.