புதுடில்லி, தமிழக கால்பந்தாட்ட நிர்வாகம் தொடர்பான வழக்கில், சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை கடுமையாக கண்டித்து அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக கால்பந்தாட்ட சங்க தேர்தல் தொடர்பாக பிரச்னை நிலவி வருகிறது. இதை தொடர்ந்து முறையாக தேர்தல் நடத்தி, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் வரை, சங்க நிர்வாகங்களை கவனிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நான்கு பேர் அடங்கிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சங்க தலைவர் ஜெசியா வில்லவராயர் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் சூர்யா காந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்ட நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தாக்கல் செய்த தமிழக கால்பந்தாட்ட சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை செலுத்த தவறினால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கிறோம்.
இந்த அபராத தொகையை மனுதாரர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். சங்க கணக்கில் இருந்து செலுத்த கூடாது.
உங்கள் சொந்த பணத்தை செலவு செய்யாததால், வழக்கு நடத்துவதன் வலியை நீங்கள் உணரவில்லை. மக்கள் பணத்தை செலவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement