ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்; ஆளுநர் உரையுடன் இன்று நடைபெறுகிறது!
தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம், வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்கும். இது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 2-வது வாரத்தில் கூடுவதாக இருந்த சட்டசபை, முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகத் தள்ளிப்போனது. இந்த நிலையில், `ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து, 19-ம் தேதி சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார்.

அதன்படி, இன்றைய தினம் சட்டசபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். சுமார் 30 நிமிடங்கள் அவர் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. வழக்கம்போல, ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி பொது பட்ஜட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் (20-ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. அதையடுத்து பட்ஜெட்மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தின் நிறைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றவிருக்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடக்கும்.